வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் – திரை விமர்சனம்

0
479

vvஎம்.எல்.ஏ ரோபோ சங்கருக்கு வலது கரமாக இருப்பவர் விஷ்ணு விஷால்.இவரின் நண்பர் சூரி.

நிக்கி கல்ராணி, போலீசாக வேண்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவரின் முயற்சியை கண்டு இவரை காதலித்து வருகிறார் விஷ்ணு விஷால்.

விஷ்ணு விஷால் எம்.எல்.ஏ.விடம் இருப்பதால் நிக்கி கல்ராணியின் அப்பா அவரிடம் பத்து லட்சம் கொடுத்து தன் மகளை போலீசாக்க வேண்டும் என்று கூறுகிறார். விஷ்ணுவும் தன்னுடைய காதலிக்காக பத்து லட்சத்தை வாங்கி ரோபோ சங்கரிடம் கொடுக்கிறார்.

ரோபோ சங்கர் கட்சியின் அமைச்சருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போகின்றது. சாகும் நிலையில் இருக்கும் அமைச்சர் ரோபோ சங்கரை அழைத்து 500 கோடி ஒரு இடத்தில் இருப்பதாக சொல்லிவிட்டு இறக்கிறார். அந்த 500 கோடியை அபகரிக்க, அமைச்சர் மனைவியின் தம்பி ரவிமரியா திட்டம் போடுகிறார்.

இந்நிலையில், ரோபோ சங்கருக்கு விபத்து ஏற்பட்டு கோமா நிலைக்கு செல்கிறார்.

நிக்கி கல்ராணி தன் சொந்த முயற்சியால் போலீசாகி விடுகிறார். தனக்கு தெரியாமல் பணம் கொடுத்ததால் விஷ்ணு விஷாலிடம் பத்து லட்சம் பணத்தை திரும்ப கேட்கிறார்.

இறுதியில் ரோபா சங்கர் கோமா நிலையில் இருந்து மீண்டாரா? இவரிடம் இருந்து பத்து லட்சம் பணத்தை திரும்ப வாங்கி, விஷ்ணு விஷால் தன் காதலில் ஒன்று சேர்ந்தாரா? அந்த 500 கோடி எங்கு இருக்கிறது என்று ரவிமரியா கண்டுபிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விஷ்ணு விஷால், முதல் முறையாக முழு நேர காமெடி படத்தில் நடித்திருக்கிறார்.
மேலும் படத்தில் சூரிக்கும், ரோபா சங்கருக்கும் அதிக வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் நிக்கி கல்ராணி போலீஸ் உடையிலும், மற்ற உடையிலும் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவே இருக்கிறார்.

புரோட்டா சூரி என்று பெயர் பெற்ற சூரியை இனிமேல் புஷ்பா புருஷன் என்றே அழைக்கலாம். அந்தளவிற்கு இப்படம் அவருக்கு பெயர் வாங்கி தந்திருக்கிறது.

கிளைமாக்ஸ் காட்சியில் ரோபோ சங்கர் சொல்லும் கதை திரையரங்கில் சிரிப்பு சரவெடி. இவருடைய நடிப்பு படத்திற்கு பெரிய பலம்.

சத்யா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார்.

சக்தியின் ஒளிப்பதிவு படத்திற்கு அதிகம் கை கொடுத்திருக்கிறது.

தொடர்ந்து காமெடி படங்களை கொடுத்து வெற்றி கண்டு வரும் இயக்குனர் எழில், இந்த படத்திலும் வெற்றி பெற்றிருக்கிறார்.

 

Share