ஒரு நாள் கூத்து – விமர்சனம்

0
238

oru-naal-koothu posterஒரு நாள் கூத்து. இன்றைய திருமணங்கள் எப்படி நிச்சயிக்கப்படுகின்றன என்பதை நிதர்சனமாய் காட்டும் ஒரு முயற்சி. அது காதல் திருமணமானாலும் பெரியவர்கள் பார்த்து நிச்சயிப்பதாக இருந்தாலும் இன்றைய இளைஞர்களின் மனநிலையும் பெற்றோர்களின் அணுகுமுறையும் எப்படி திருமணங்களை சொதப்புகிறது என்பதை நான்கு கதையாக சொல்லி அதில் ஒன்றுக்கொன்று தொடர்பு படுத்தி சுவாரஸ்யபடுத்தியிருக்கிறார் இயக்குனர்.

ஐ.டி. கம்பனியில் நல்ல வேலையில் இருக்கும் ராஜ்(தினேஷ்) தன் உடன் பணிபுரியும் காவ்யாவை விரும்புகிறார். ராஜ் தன் குடும்பச் சூழலை மனம் விட்டு காதலியிடம் பேசாமல் போக்குக் காட்டிக்கொண்டு இருக்கிறார். கடைசியில் அவளிடம் சொல்லும் போது வேறொருவடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கல்யாணப்பத்திரிக்கையுடன் நிற்கிறார் காவ்யா. அவர்கள் காதல் கைகூடியதா என்பது ஒரு கதை.

ரெடியோ ஜாக்கியாக அதீத தன்னம்பிக்கையுடன் எதற்கும் அலட்டிக்கொள்ளாத ஜாலிப்பேர்வழியான சதீஷ்ற்கு, உடன் வேவை செய்யும் சுசீலாவிடம் எதிர்பாராத சூழலில் தொடர்பு ஏற்படுகிறது. திருமணம் செய்துக்கொள்ளவும் அவளுக்கு வாக்குகொடுக்கிறார். ஆனால் அவரே சூழ்நிலை கைதியாகி வேண்டாத திருமணத்திற்கு தள்ளப்படுகிறார். அவர் கொடுத்த வாக்கை காப்பாற்றினாரா? என்பது இன்னொரு கதை.

பெற்றோர் பார்த்து பெண்ணோடு நிச்சயதார்த்தம் முடிந்த பின்பு அவள் சரியான ஜோடிதானா இன்னும் நல்ல இடமாக பார்த்திருக்கலாமே என்று குழம்புகிறார் பாஸ்கர். தன் முடிவில் குழப்பம், முடிவை சொல்வதில் தயக்கம், சங்கடத்தை எதிர்கொள்வதில் கோழைத்தனம் என்றிருக்கும் பாஸ்கர் கடைசியில்  என்ன முடிவெடுத்தார் அவருக்கு திருமணம் நடந்ததா? என்பது மற்றுமொரு கதை.

லஷ்மியை பெண்பார்க்க வரும் மாப்பிள்ளை நல்ல வேலையில் இருந்தும் தான் விரும்பும் பெண்ணை மணம் முடிக்க முடியாத கையாளாதனத்துடன் இருக்கிறார். இது நான்காவது கதை

பெண் கதாபாத்திரங்களான காவ்யா, சுசீலா, லஷ்மி மூவருமே வீட்டிற்கு விரும்பியவனுக்கும் கட்டுப்பட்டு பொறுமையாக இருக்கிறார்கள். ஆனாலும் கடைசியில். சுயவிரும்பத்திற்கு முக்கியமில்லாமல் சூழ்நிலைகளுக்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டு பாவமாக காட்சியளிக்கிறார்கள்.

இது ஒருபுறமிருக்க இவர்களின் பெற்றோர்கள் வீண் ஜம்பம், பிடிவாதம் ஆத்திரம் போன்ற குணங்களுடன் தன் பிள்ளைகளை வழிநடத்துபவர்களாக இல்லாமல் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள்.

திருமணம் என்னும் ஒரு நாள் கூத்தை மையப்படுத்தி பல கோணங்களில் பல காத்திரங்களை வைத்து எந்த குழப்பமும் இல்லாமல் திரைக்கதையை நகர்த்தியவிததில் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் வெற்றி பெற்றிருக்கிறார்.

ஜஸ்டின் பிரபாகர் இசையில் எல்லா பாடல்களுமே மென்மையாக மனதை வருடுகிறது.

புதுபுகம் நீவேதா காவ்யா பாத்திரத்தில் அழக்காக நடித்திருக்கிறார். ரித்விக்காவும் ரேடியோ ஜாக்கியாக பொருந்திப்போகிறார்.

சந்தோஷமான ஒரு நாளில் தொடங்கி பல ஆண்டுகள் சந்தோஷமாக தொடர வேண்டிய திருமணத்தை ஒரு நாள் கூத்தாக நினைத்து வாழ்க்கை முழுவதும் தொடரும் கேலிக்கூத்தாக்கி விடுவதில் இன்றைய பெற்றோர் பிள்ளைகள் இருவருக்குமே சமபங்கு இருக்கிறது என்பதையெ இந்த படம் காட்டுகிறது.

Share