இறைவி – திரை விமர்சனம்

0
511

irசிற்ப தொழில் செய்து வரும் ராதாரவிக்கு எஸ்.ஜே.சூர்யா மற்றும் பாபி சிம்ஹா என்ற இரு மகன்கள்.

மூத்த மகனான எஸ்.ஜே.சூர்யா சினிமா இயக்குனர். இவர் ஒரு படத்தை இயக்கி விட்டு, தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தயாரிப்பாளர் படத்தை வெளியிடாமல் இருக்கிறார்.

இளைய மகனான பாபி சிம்ஹா கல்லூரியில் படித்து வருகிறார்.

எஸ்.ஜே.சூர்யா விரக்தியில் எப்போதும் மது குடித்துக் கொண்டே இருக்கிறார். அவரை நினைத்து அவரது மனைவியான கமலினி முகர்ஜி மிகவும் வருந்துகிறார்.

மறுபக்கம் இவர்கள் குடும்பத்துடன் வளர்ந்த விஜய் சேதுபதி, கணவனை இழந்த பூஜா மீது காதல் வயப்படுகிறார். ஆனால் பூஜாவோ, விஜய் சேதுபதியை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். இதனால் விஜய் சேதுபதி அஞ்சலியை திருமணம் செய்துக் கொள்கிறார். அஞ்சலியுடன் நெருக்கமாக வாழ்ந்தாலும் பூஜாவின் நினைவாகவே இருக்கிறார்.

இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யாவிற்கும், தயாரிப்பாளருக்கும் மீண்டும் பிரச்சனை ஏற்படுகிறது. இதில் விஜய் சேதுபதி நுழைந்து தயாரிப்பாளரை கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போகிறார். அதேசமயம், அஞ்சலிக்கு குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்ததும் கணவன் அருகில் இல்லாத குறை அஞ்சலியை வாட்டுகிறது.

இதுபோன்ற இறுக்கமான சூழ்நிலையில் விஜய் சேதுபதி மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் குடும்பத்தில் ஏற்படும் அதிரடி திருப்பங்களே படத்தின் மீதிக்கதை.

எஸ்.ஜே.சூர்யா முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குடிக்கு அடிமையாக கதாபாத்திரத்தை ஏற்றிருந்தாலும், இறுதிக் காட்சியில் கண்களை குளமாக்குகிறார்.

தாடி, கண்ணாடியுடன் முதிர்ச்சியான தோற்றத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. அவருக்கே உரிய பாணியில் யதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

பெண் சிலைகள் மீது பாசமும், அதன் மூலம் பணமும் பார்க்கும் ஜெகனாக பாபி சிம்ஹா, ரொம்பவே நடித்திருக்கிறார்..

மேக்கப் இல்லாமல் ஒரு ஏழ்மையான குடும்ப பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் அஞ்சலி.

தன் கணவரை நினைத்து வருந்தும் காட்சியில் கமலினி முகர்ஜி ரசிகர்களின் அனுதாபத்தை பெறுகிறார்.

மாறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்று துணிச்சலுடன் நடித்திருக்கிறார் பூஜா திவாரியா.

சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை அதிகம் பேசப்படுமளவிற்கு கொடுத்திருக்கிறார்.

சிவக்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

குடும்பத்தைப் பற்றி சிந்திக்காத ஆண்களால், பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சொல்லியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

.

Share